புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து டிஜிட்டல் நியூஸ் வெளியீட்டாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்குக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-23 20:13 GMT
சென்னை,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்)- 2021-ஐ கொண்டுவந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி, டிஜிட்டல் நியூஸ் வெளியீட்டாளர்கள் சங்கம், பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தடை வேண்டும்

அந்த மனுவில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது. எனவே, புதிய விதிகளின்படி எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

பதில் அளிக்க வேண்டும்

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்குக்கு 2 வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும். புதிய விதிகளின்படி மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுவான உத்தரவு எதையும் இந்த வழக்கில் தற்போது பிறப்பிக்க முடியாது. ஒருவேளை நடவடிக்கை எடுத்தால் மனுதாரர்கள் இந்த கோர்ட்டை மீண்டும் அணுகலாம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்