அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது போடப் பட்ட போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2021-06-25 00:46 GMT
சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 21-ந்தேதி கூடிய முதல் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.

அடுத்த 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பதில்

இந்த நிலையில், நிறைவு நாளான நேற்று, விவாதத்தில் பங்கேற்று பேசியவர்களுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4061 கிலோ மீட்டர் தொலைவிலான காவிரி கால்வாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குத் தேவையான 25 முக்கிய கோரிக்கைகளோடு பிரதமரை சந்தித்து அவற்றை விளக்கமாக எடுத்து வைத்திருக்கிறோம். மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தோம்.

டவ்தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம்.

அடக்க முடியாத யானை

அதுமட்டுமின்றி, 3 நாட்களுக்கு முன்பு கவர்னரின் உரை மூலமாக ஏராளமான கொள்கை அறிவிப்புகளைச் செய்திருக்கிறோம். இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறுவோர்க்கு இதுதான் என்னுடைய பதில். இதுவரை 50 நாட்களுக்குள் செய்திருக்கக்கூடிய மிக முக்கியமான சாதனைகளில் சிலவற்றைத்தான் நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன். இவற்றை எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் மக்களுக்கு நிச்சயமாக நன்கு தெரியும்.

கவர்னர் உரை குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை. யானையும் இல்லை” என்று சொன்னார். யானை என்று சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். தி.மு.க. என்பது யாராலும் அடக்க முடியாத யானை. 4 கால்கள்தான் யானையினுடைய பலம். ‘சமூகநீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின் பலத்தில்தான் தி.மு.க.வும் நிற்கிறது; இந்த அரசும் நிற்கிறது.

ஆலோசனைக் குழு

இந்த கவர்னர் உரையைப் படிப்பவர் கண்களுக்கு சமூகநீதியும், சுயமரியாதையும், தமிழுக்கும், தமிழர்க்கும் நாங்கள் செய்ய இருக்கும் நன்மைகளும், மாநில உரிமைகளுக்கான எங்களது முழக்கங்களும் நிச்சயம் தெரியும்.

தமிழ்நாட்டின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சீர்படுத்துவதே எங்களுடைய முதல் வேலை. அதையெல்லாம் மனதிலே வைத்துத்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறோம்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை

இன்றைய நிதி நிலைமையில், ஏழை - எளிய, நடுத்தர மக்களும், பாட்டாளி வர்க்கத்தினரும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதால், அவர்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளித்து வருகிறோம். இருப்பதை எப்படிப் பெருக்குவது, பெருக்கியதை எப்படிப் பகிர்ந்தளிப்பது, மாநிலத்தின் வளத்தையும், நலத்தையும் எப்படிப் பேணுவது, உயர்த்துவது என்பதை, ஆழ்ந்து, ஆராய்ந்து, “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்” செயலாற்றுவோம் என்ற என்னுடைய உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகிறேன்.

அவசரப்பட்டு, கவர்னர் உரையிலே அது இல்லையே, இது இல்லையே என்றெல்லாம் சொன்னீர்களே. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளன. கவர்னர் உரையிலே இருப்பதை எல்லாம் விடுத்து, இது இதெல்லாம் இல்லையே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு, “திருச்சியிலே நின்றுகொண்டு, அங்கே இருக்கும் மலைக்கோட்டையையும், கரைபுரண்டோடும் காவிரியையும், கல்லணையையும் காணாமல், “தில்லை நடராசர் எங்கே?” என்று கேட்பவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதையே நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அறிவிப்புகள் வெளியீடு

எங்களது பழைய கொள்கைகளுக்கு மாறுபாடு இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அதைக் குறிப்பிடவில்லை, இதைக் குறிப்பிடவில்லை என்பது சரியான குற்றச்சாட்டாக இருக்க முடியாது. ஒரு புத்தகத்தில் அனைவருடைய பெயரும் இருக்க வேண்டும் என்று சொன்னால், அது டெலிபோன் டைரக்டரியாகத்தான் இருக்க முடியும். இந்த கவர்னர் உரை என்பது தி.மு.க. அரசாங்கம் போகும் பாதையை ‘‘டைரக்ட்’’ பண்ணும் புத்தகம்.

அதேபோல், கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய கருத்துகளுக்குச் செயல்வடிவம் கொடுத்திடுவதற்கான சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளபோதும், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சில பிரச்சினைகள் வருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். தேவைப்படும் உயர் சிகிச்சை மருத்துவர்களோடு இந்த மையங்கள் செயல்படும்.

வட மாவட்டங்களில் தொழிற்சாலைகள்

நம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நோக்கத்தோடுதான் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்போம் என்று அறிவித்திருக்கிறோம்.

இதன் முதற்கட்டமாக, செய்யாறில் 12 ஆயிரம் பேருக்கும், திண்டிவனத்தில் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ளன.

வழக்குகள் வாபஸ்

கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

புதிய சமத்துவபுரங்கள்

ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தை சமப்படுத்த போராடிய தந்தை பெரியார் பெயரால் 240 சமத்துவபுரங்களை கட்டினார் தலைவர் கருணாநிதி. அந்த சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப்படாத அவல நிலையில் இப்போது இருக்கின்றன. அந்த சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கோவில்களின் புனரமைப்புக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதி இருந்தது. அதற்கு முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி செலவில் கோவில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்க, குளங்களைச் சீரமைத்திட, தேர்களை புதுப்பித்து திருவிழாக்கள் நடத்திட தேவையான பணிகள் 100 கோவில்களில் மேற்கொள்ளப்படும்.

புகழுக்கு மயங்க மாட்டேன்

நிறைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இல்லாத குறைகளை உருவாக்கி, ஓங்கி உரைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிகாட்டுவது ஆகாது. எனினும், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லத்தான் செய்வார்கள்; அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சி; மாற்றுக் கருத்துகளை, வேறுபட்ட எண்ணங்களை வெளிப்படுத்த ஜனநாயகம் இடம் அளித்திருக்கிறது.

புகழுக்கு மயங்கவும் மாட்டேன். குறைகூறுவதால் குன்றிவிடவும் மாட்டேன். ஏனென்றால் இரண்டையுமே அதிகளவு எனது வாழ்க்கையில் நான் பார்த்துவிட்டேன்.

உண்மையாக இருக்க தூண்டுகிறது

புகழுரைகள், என்னை அதிகளவு அடக்கமானவனாகவும், புகழுரைக்கும்போது அது என்னை மேலும் பக்குவப்படுத்துவதற்கு நான் பயன்படுத்துவேன். எச்சரிக்கை உள்ளவனாகவும் அது ஆக்கி இருக்கிறது. ஏன், என் மீது இதுவரை சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் ஆகியவை என்னை மேலும் மேலும் உழைக்கவும், உண்மையாக இருக்கவும்தான் தூண்டுகிறது. அப்படித்தான் நான் பயன்படுத்தப் போகிறேன்.

ஏனெனில், இந்த மன்றத்தில் வைக்கப்பட்ட புகழுரை - இகழுரை இரண்டையும் எனக்கான உரமாகவே கொண்டு எனது அரசியல் பயணத்தை நான் தொடர்கிறேன். ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், அந்தப் பகட்டோடு நான் என்றைக்கும் நடந்துகொண்டது கிடையாது. அந்தத் தலைவருக்கு கடைசித் தொண்டனாகத்தான் நான் நடந்து கொண்டேன். இது எனது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். அந்தத் தலைவருக்கும் தெரியும்.

கர்வம் கிடையாது

என்னுடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்புத் தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அவர் இடத்தில் தலைமைத் தொண்டனாகத்தான் நான் உட்கார்ந்திருக்கிறேனே தவிர, பேரறிஞர் அண்ணாவின் இடத்தில், தலைவர் கருணாநிதியின் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன் என்ற கர்வம் எனக்கு ஒரு துளியும் கிடையாது. இன்றல்ல, அது என்றும் இருக்காது.

இத்தகைய மனநிலை கொண்ட நான் இந்த அவைக்குச் சொல்ல விரும்புவது, அரசியல் எல்லைகளை கடந்து, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, தமிழ்நாட்டு மக்களுக்காக நம்மை நாமே ஒப்படைத்துக் கொள்வோம் என்பதுதான்.

ஆரம்ப கல்வி

எங்களைப் பொறுத்தவரையில், தேர்தல் கால வாக்குறுதிகளை, வாக்குகளை ஈர்ப்பதற்கான காந்தம் எனக் கருதாமல், நாட்டின் மேம்பாட்டுக்கு, நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதியாகச் செய்தே தீர வேண்டிய செயல்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்பது, தலைவர் கருணாநிதி எங்களுக்குத் தந்த ஆரம்பக் கல்வி அது.

தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று 6-வது முறை ஆட்சி அமைக்கக் காரணமான தமிழ்நாட்டு மக்களை இருகரம் கூப்பி, என்னுடைய தலை தாழ்த்தி, எனது பணிவு அனைத்தையும் ஒருங்கே திரட்டி மீண்டும் வணங்குகிறேன்; மனமும், வாயும் மணக்க மணக்க, பல்லாயிரம் முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களை மறக்கமாட்டோம்

மாற்றத்தைப் படைத்த தமிழ்நாட்டு மக்களை மறந்துவிட முடியுமா? ராமலிங்க அடிகள் மனம் உருகிச் சொன்னதைப் போல, “பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்” எங்கள் இதயத்தின் இயங்கு சக்தியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்