பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-07-03 00:14 GMT
கொரோனா காலத்தில் வேலையின்றி, வருமானமின்றி அடித்தட்டு மக்கள் திண்டாடி வரும் சூழலில், பெட்ரோல் விலை சதத்தை கடந்தும், டீசல் விலை சதத்தை நெருங்கியும், சமையல் எரிவாயு விலை ரூ.1000-ஐ நெருங்கியும் கொண்டிருப்பது பெருங்கொடுமை. மக்களின் சுமையை குறைத்து சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கியமான கட்டமைப்பை 
உருவாக்கி கொடுப்பதே அரசின் முதல் கடமை. அக்கடமையை மறந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தங்கள் விருப்பத்துக்கு நிர்ணயித்து, நாள்தோறும் விலையை உயர்த்தி கொண்டே போவது ஏழை மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் காய்கறிகள், மளிகை பொருட்களின் போக்குவரத்தின் விலையேற்றத்திற்கு காரணமாக அமையும் என்பது அரசிற்கு தெரியாதா? இதனால், பொருட்களின் விலையேறி, பசியால் மக்கள் உயிர்போகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை உணர வேண்டும். எனவே, மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடும், கருணையோடும் 
மக்கள் வலிகளை உணர்ந்து துரிதமாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்