திருச்சி வியாபாரி மூளை சாவு; கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி

திருச்சி அருகே விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காய வியாபாரி மூளை சாவு அடைந்தார். இதனால் அவருடைய உடல் உறுப்புகளை அவருடைய மனைவி தாமாக முன்வந்து தானம் செய்தார்.

Update: 2021-07-04 23:03 GMT
வெங்காய வியாபாரி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அம்பலகார தெரு சோழன் நகரை சேர்ந்தவர் துரைராஜ் மகன் செல்வராஜ் (வயது 47). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி காலை மார்க்கெட்டுக்கு செல்வதற்காக செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று 
கொண்டிருந்தார்.நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள பனமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போது, பின்னால் வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் கீழே விழுந்து உடலில் பலத்த காயமடைந்தார்.

தீவிர சிகிச்சை
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து, செல்வராஜின் மனைவி சுபத்ரா தேவி (41) கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வந்தனர்.

உடல் உறுப்புகள் தானம்
இதற்கிடையே சிகிச்சையில் இருந்த செல்வராஜ் நேற்று முன்தினம் மூளை சாவு அடைந்துவிட்டதாக அவருடைய மனைவி சுபத்ராதேவியிடம் தெரிவித்தனர். இதனால் செல்வராஜின் மனைவி சுபத்ரா தேவி, மகன் அசோக் மற்றும் மகள் கங்கா ஆகியோர் செல்வராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர்.அதனையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செல்வராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலமாக நேற்று பிரித்து எடுத்தனர். அவரது இரண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து முறைப்படி உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்காக அனுப்பிவைத்தனர்.

மதுரைக்கு அனுப்பிவைப்பு
இதில் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, செல்வராஜின் கல்லீரல் பலத்த பாதுகாப்புடன், போக்குவரத்து சீர் செய்யப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு 
எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சிலரை வாழ வைக்க முடியும்
இதுகுறித்து செல்வராஜின் மகன் கூறும் போது, என் தந்தை இறந்தது வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில் இறந்த என் தந்தை மூலம் வேறு சிலரை வாழ வைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் குறித்து பள்ளியில் படிக்கும் போது என் ஆசிரியர்களும் கூறியுள்ளனர். அதனடிப்படையில், எனது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்து, எனது தாயாரிடமும் எடுத்து கூறினோம். இதையடுத்து அவர் எனது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார் என்றார்.

மேலும் செய்திகள்

ஊர்வலம்