சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை; மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!

தங்க நகைகளை பத்மா உடனடியாக பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.;

Update:2026-01-12 16:22 IST

சென்னை தியாகராய நகர் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் நேற்று சென்னை மாநகராட்சி பெண் தூய்மைப்பணியாளர் பத்மா என்பவர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருப்பதை கண்டார். அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் பிளாஸ்டிக் கவரை பிரித்து நகைகளை சோதனை செய்தபோது அவை சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 சவரன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏற்கனவே பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் சுமார் 45 சவரன் நகையை தொலைத்து விட்டதாக புகார் அளித்து சென்றது தெரியவந்தது.

பின்னர், புகார்தாரரான ரமேசை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பத்மா போலீசாரிடம் ஒப்படைத்தது ரமேசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, 45 சவரன் நகையை போலீசார் ரமேசுடம் ஒப்படைத்தனர். மேலும், ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 சவரன் தங்க நகையை கண்டெடுத்து, அதனை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில், சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைந்து பிறருக்கு முன்னுதாரணமாக தகிழ்ந்த பத்மாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். தூய்மைப்பணியாளர் பத்மாவை இன்று தலைமை செயலகத்திற்கு நேரில் அழைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், பத்மாவுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்