பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு: ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் பணியமர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-07-08 22:54 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 12 ஆயிரம் பேர் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளராக பணியாற்றினர். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில் 11 மண்டலங்களில் குப்பைகளை கையாளும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மாகராட்சி வழங்கியது.

இதனால் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தூய்மை பணியாளர்கள் முன்னெடுத்தனர்.

சாலை மறியல் போராட்டம்

இந்த நிலையில் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆண்-பெண் தூய்மை பணியாளர்கள், பணியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் தங்களுக்கு அதே பணியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்னும் 15 நாட்களில் பணி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும், ரிப்பன் மாளிகைக்கு வெளியே, ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் அமர்ந்தும், ஒரு சிலர் படுத்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டு, ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், யாரும் களைந்து செல்லாமல், தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 3 பேர் மயங்கி விழுந்தனர். உடனே போலீசார், அவர்களை மீட்டு ஆட்டோ மூலம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, “எங்களை மீண்டும் மாநகராட்சியில் பணியமர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சிலர் களைந்து சென்று விட்டனர். இந்த போராட்டத்தால் ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்