பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-13 06:25 GMT
சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக மாமல்லபுரம் மகளிர் போலீசார் முதலில் வழக்குபதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சிவசங்கர் பாபாவை கைது செய்து 3 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தனித்தனியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் 2 வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவாகி இருந்தது.

ஒரு வழக்கில் போக்சோ சட்டம் போடப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின்  தங்கையிடமும் சிவசங்கர் பாபா பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கிலும் புதிதாக அவர் மீது மேலும் ஒரு போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து 3-வதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்துள்ளதாக செங்கல்பட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் புதிதாக போடப்பட்ட போக்சோ வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்