முன்னாள் அமைச்சருக்கு எதிரான மாநகராட்சி ‘டெண்டர்' முறைகேடு புகார் மீது மறுவிசாரணை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான புகார் மீது மறுவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்தது.

Update: 2021-07-19 22:11 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் அமைச்சருக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. மனுதாரர்கள் கொடுத்த புகார்களின்மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், ‘அமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை' என்று சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர்.

தணிக்கைத்துறை அறிக்கை

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த அமைப்பின் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.சுரேஷ், ‘மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கை சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த வழக்கில் மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பல விஷயங்கள் உள்ளன. மாநகராட்சிகளின் ஒப்பந்தப்பணி முறைகேட்டை உறுதி செய்யும் வகையில், அந்த அறிக்கையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஒப்பந்தப்பணி வழங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளன. எனவே, அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறமுடியாது’ என்று வாதிட்டார்.

மறுவிசாரணை

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘இந்திய தணிக்கைத்துறை அறிக்கையிலும் இந்த முறைகேடு குறித்து கூறப்பட்டுள்ளதால், அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை முடித்துவைக்கலாம் என்று ஏற்கனவே எடுத்த முடிவை தமிழக அரசு மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. எனவே, அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மறுவிசாரணை நடத்துவார்கள். அதன் அடிப்படையில், சட்டப்படியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்த டெண்டர் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை. எனவே, இதுகுறித்த புலன் விசாரணையை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

அவகாசம்

அமைச்சர் வேலுமணி சார்பில் ஆஜரான வக்கீல் வி.இளங்கோவன், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்