முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-22 04:58 GMT
சென்னை, 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவிகள் விற்க 118 நிறுவனங்கள் இருக்கும்போது, 8 நிறுவனங்களிடம் மட்டும் அவற்றை வாங்குமாறு போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும், ஜிபிஎஸ் கருவிகள் வாங்க போடப்பட்ட உத்தரவுக்கும் ஐகோர்ட் தடை விதித்தது. இது தொடர்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்துவந்தார். இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்