மாதவரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

மாதவரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இளநிலை உதவியாளரும் பிடிபட்டார்.

Update: 2021-07-28 00:22 GMT
செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவர் சார் பதிவாளர் ஆக பணிபுரிந்து வந்தார். மேலும் அங்கு சுதாகர் என்பவர் இளநிலை பொறியாளர் உதவியாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் மாதவரத்தில் வீட்டுமனை வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார். அவர் மாதவரம் சார் பதிவாளர் அலுவலகம் சென்று அந்த வீட்டுமனைக்கான பத்திரத்தை வேண்டி விண்ணப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க இளநிலை உதவியாளர் சுதாகரை அணுகியுள்ளார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

அவர், சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் பணியை விரைந்து செய்து முடிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து, துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். பின்னர் மறைவாக இருந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுதாகர் ஆகியோர் ரூ.10 ஆயிரத்தை வாங்கும்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்