எளிமைப்படுத்தும் வகையில் கோவில்களில் உழவாரப் பணிகளுக்கான இணையவழி பதிவு வசதி

கோவில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இணையவழி முறையில் பதிவு செய்யும் வசதியை அமைச்சர்கள் சேகர்பாபு, கீதா ஜீவன் ஆகியோர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.

Update: 2021-07-28 02:25 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தனர்.

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப் பணிகள் செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வ குழுக்கள் மூலமாக பணிகள் நடந்து வந்தன. இதனை எளிமைப்படுத்தும் வகையில் www.hrce.tn.gov.inஎன்ற இணையவழி மூலம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ள நபர்கள் எளிய முறையில் முன்பதிவு செய்து உரிய அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு பணிகளை செய்யலாம்.

பதிவு செய்யும் முறை

இணையவழி முகவரியில், இ-சேவை பகுதியை தோ்வு செய்து, அதில் உள்ள உழவாரப் பணி பகுதியில் உள்ள கோவில் பட்டியலில் தங்களுக்கு விருப்பமான கோவிலை முதலில் தோ்வு செய்ய வேண்டும். பின்னர், உழவாரப்பணி செய்ய இருக்கும் உகந்த தேதி, நேரம், உழவாரப்பணி மற்றும் முன்பதிவு செய்யப்படாத சீட்டினை அட்டவணையிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். அத்துடன், பணி செய்ய விரும்புவரின் பெயர், அடையாள சான்று, பாலினம், வயது, வீட்டு முழு முகவரி, அஞ்சல் குறியீடு, இ-மெயில், செல்போன் எண், பணி வகைத் தேர்வு, அங்கீகார மதிப்பு உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்வையிட்டு நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட உடன் பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு கடவுச்சொல் வந்த உடன் அங்கீகார மதிப்பை உள்ளிட வேண்டும். பின்னர் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரிக்கும் அனுமதி சீட்டின் பிரதி ஒன்று அனுப்பப்படும். அத்துடன் இ-சேவை பகுதியில் இ-டிக்கெட் பதிவிறக்கம் பகுதியில் சென்று தங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் மற்றும் இ-மெயில் முகவரியை பயன்படுத்தி அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

47 முதுநிலை கோவில்கள்

உழவாரப்பணியை உரிய தேதியில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டால் இ-சேவை பகுதிக்கு சென்று பதிவு செய்த நபர்களே அனுமதியை ரத்து செய்ய வேண்டும். முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களுக்கு இச்சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர்(நிர்வாகம்) இரா.கண்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா, கூடுதல் கமிஷனர்(விசாரணை) திருமகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்