சென்னையில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் 3 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

சென்னையில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்த 100 கோடி பணத்தை நூதனமாக மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2021-07-28 03:22 GMT
சென்னை,

சென்னை துறைமுக சபை சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அந்த டெபாசிட் பணம், அந்த வங்கி கணக்கில் இருந்து, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கணேஷ்நடராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு நூதனமான முறையில் மாற்றப்பட்டுள்ளது.

கணேஷ்நடராஜன் தன்னை சென்னை துறைமுகத்தின் நிதி பிரிவு துணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அதற்கான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, அதே வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, ரூ.100 கோடி பணத்தை அந்த புதிய கணக்கிற்கு மாற்றி, அதில் இருந்து ரூ.45 கோடி எடுத்து ஏப்பம் விட்டு விட்டதாக புகார் எழுந்தது.

இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் இந்த மோசடி பற்றி கண்டுபிடித்து விட்டனர். கோயம்பேடு இந்தியன் வங்கியின் அப்போதைய மேலாளரின் துணையோடுதான் இந்த நூதன மோசடி அரங்கேறி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில், வங்கி கணக்கில் மீதி இருந்த ரூ.55 கோடியை முடக்கி விட்டனர்.

சி.பி.ஐ. சோதனை

இந்த மெகா மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் முதலில் புகார் கொடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ. போலீசாரும் குறிப்பிட்ட வங்கியின் மேலாளர் சேர்மதிராஜா மற்றும் பணத்தை சுருட்டியதாக புகார் கூறப்பட்ட கணேஷ்நடராஜன், இடைத்தரகர் மணிமொழி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நேற்று இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனையடுத்து வங்கி மேலாளர் மற்றும் கணேஷ்நடராஜன், இடைத்தரகர் மணிமொழி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்