சென்னையில் மத்திய அரசு அதிகாரி மனைவியிடம் ரூ.2½ கோடி நூதன மோசடி தலைமறைவான டெல்லி பெண் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி மனைவியிடம் ரூ.2½ கோடி நூதன மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த டெல்லி பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-28 03:25 GMT
சென்னை,

சென்னை மந்தைவெளி திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன் (வயது 67). ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், நல்லாசிரியர் விருது பெற்றவர். இவரது கணவர் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் இறந்துவிட்டார். அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார்.

இந்த விவரங்களை தெரிந்துகொண்ட, டெல்லியில் செயல்பட்ட மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது மோசடி விளையாட்டை தொடங்கினார்கள். சுதா நன்றாக இந்தி பேசுவார். அதை வைத்து டெல்லி மோசடி கும்பல் சுதாவிடம் போனில் தொடர்புகொண்டு இந்தியில் பேசி தங்களது மோசடி லீலையை அரங்கேற்றியது.

ரூ.2½ கோடி மோசடி

சுதாவிடம் பேசிய டெல்லி மோசடி ஆசாமிகள், உங்கள் கணவருக்கு மேலும் ரூ.19 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி ஆசிரியை சுதாவும், அதற்காக மோசடி நபர்கள் சொன்னபடி ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

ரூ.19 லட்சம் வாங்குவதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்றும், அதை திருப்பி தந்துவிடுவார்கள் என்றும் சுதாவிடம் பேசிய மோசடி நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாக ரூ.2½ கோடி வரை சுருட்டிவிட்டனர். திருப்பி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் சுதாவும் மோசடி நபர்கள் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் மோசடி நபர்கள் சுதாவிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். அதன்பிறகுதான் சுதாரித்துக்கொண்ட சுதா, எல்.ஐ.சி. நிறுவனத்தில் நேரில் சென்று விசாரித்தார். மோசடி கும்பல் சொன்னது அத்தனையும் பொய் என்று தெரியவந்தது. நூதன முறையில் டெல்லி கும்பல், சுதாவை ஏமாற்றி விட்டனர். மோசடி ஆசாமிகள், எல்.ஐ.சி. நிறுவனத்தில் இருந்து பேசுவது போல பேசி இந்த மோசடி லீலையை அரங்கேற்றி உள்ளனர்.

தலைமறைவான பெண் கைது

தான் மோசம்போனது பற்றி ஆசிரியை சுதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

டெல்லிக்குச் சென்று முகாமிட்ட தனிப்படை போலீசார், மோசடி கும்பலைச் சேர்ந்த டெல்லி ஆசாமிகள் 6 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்த சிம்ரன்ஜித் சர்மா (29) என்ற பெண், போலீசார் கையில் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடிவந்த போலீசார் நேற்று முன்தினம் டெல்லியில் கைது செய்தனர். டெல்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை பார்த்த இவர், மோசடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளார். அதற்காக இவருக்கு பல லட்சம் பணம் கிடைத்துள்ளது. சென்னை அழைத்துவரப்பட்ட அவர் நேற்று கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்