அடையாள அட்டை, துப்பாக்கி பறிமுதல் ‘சைரன்' பொருத்திய காரில் வலம் வந்த போலி போலீஸ் அதிகாரி கைது

‘சைரன்' பொருத்திய காரில் வலம் வந்த போலி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-08-03 00:58 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் லட்சுமிபுரம் வத்தலக்குண்டு சாலையில் சுங்கச்சாவடி அருகே, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ‘சைரன்’ பொருத்திய கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் ‘காவல்' என்று எழுதப்பட்டிருந்தது.கோவை பதிவு எண் கொண்ட அந்த காரில், அரசு வாகனம் என்பதற்கான குறியீடான ‘ஜி’ என்ற ஆங்கில எழுத்தும் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த காரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வருவதாக முதலில் கருதினர். ஆனால் காரில் டிரைவரை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் அந்த காரை போலீசார் நிறுத்தினர்.

அப்போது காரை ஓட்டி வந்த டிப்-டாப் உடை அணிந்த ஒருவர் கீழே இறங்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என்று கூறினார். ஆனால் அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தார்.

இதற்கிடையே அவருடைய செயல்பாடுகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், சென்னை கொளத்தூர் ஜீவாநகரை சேர்ந்த சின்னப்பையன் மகன் விஜயன் (வயது 42) என்று தெரியவந்தது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ள இவர், தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என கூறி வலம் வந்துள்ளார். அவரிடம் இருந்து போலீஸ் உதவி கமிஷனர் என்பதற்கான அடையாள அட்டை, துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் போலீசார் ஆய்வு செய்ததில் அவை போலியானது என்று தெரியவந்தது.

இதேபோல் காரில் இருந்து போலீஸ் உதவி கமிஷனர் அணியக்கூடிய போலீஸ் சீருடை மற்றும் தொப்பி பறிமுதல் செய்யப்பட்டது. ‘சைரன்' பொருத்திய காரில் சென்னையில் இருந்து தேனிக்கு விஜயன் வந்துள்ளார். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். சிறு வயதில் இருந்தே போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாகவும், அது நிறைவேறாததால்,போலி அதிகாரியாக வலம் வந்ததாகவும் விஜயன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி என்று தன்னை கூறி அவர் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்