60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2021-08-09 23:05 GMT
மதுரை,

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றியும், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது.

பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மைசூருவில் வைத்தது ஏன்?

அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்.

விளக்கம் அளிக்க உத்தரவு

மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்