வனத்துறையினருடன் இணைந்து கோவில்களில் 1 லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் அமைச்சர்கள் ஆலோசனை

வனத்துறையினருடன் இணைந்து கோவில்களில் 1 லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் அமைச்சர்கள் ஆலோசனை.

Update: 2021-08-13 19:13 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி கோவில்களில் வனத்துறையுடன் இணைந்து ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சரால் கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தலமரங்களை 3 மாதத்திற்குள் நட முடிவு செய்யப்பட்டு அதன் ஆயத்த பணியாக வனத்துறையுடன் இணைந்து இப்பணிகளை முடிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பருவநிலைக்கு ஏற்றவாறு என்னனென்ன மரங்களை நடலாம் என முடிவு செய்து அந்தந்த மரங்களை வனத்துறையுடன் இணைந்து நல்ல முறையில் பராமரித்து தல மரங்களை கோவில் வளாகத்தில் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான தலமரங்களை வனத்துறையினர் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்பிரியா சாகு, முதன்மை தலைமை வனபாதுகாவலர் அசோக் உப்ரேதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்