பணக்காரர்களுக்கு எதற்கு நிவாரண நிதி? மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்

மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும், அதற்கான தரவுகள் தயார் செய்யப்படும் என்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறினார்.

Update: 2021-08-14 00:03 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கிய நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது:-

கடினமான சூழலில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை இது.

இனிவரும் காலத்தில் நிர்வாகம் மற்றும் ஆளுமை எவ்வாறு அமையும் என்பதற்கான முன்னோடி அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.

அரசின் நோக்கம்

நகர்ப்புறங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவு. எனவே நகர்ப்புறங்களுக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு அரசு கடன் பெற முடியுமோ என்பது அந்த அளவுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு தற்காலிக நிலைதான். கடனைக் குறைக்கவும், கடன் பெறும் நிலையை மாற்றவும் பல நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு 13-ந்தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டீசலை ஆடம்பர கார்கள் அதிகம் உபயோகிக்கின்றன. எனவே டீசலின் விலை குறைக்கப்படவில்லை. டாஸ்மாக் மது விற்பனை மூலமாக ரூ.35 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

நிலையான வருமானம் உள்ளவர்களுக்கு ஏன் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. மக்களின் பொருளாதார நிலை தொடர்பான ஒரு கருத்தை உருவாக்கி, அதற்காக நிபுணர் குழுவை அமைத்து, தரவுகளை உருவாக்கி, அதை மக்களிடம் கூறுவோம். யார் யார் எந்த நிலையில் வருகிறார்களோ, அதனடிப்படையில் அவர்களுக்கு அந்தந்தத் திட்டங்களை வழங்குவோம். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையும் அந்த வகையில் அளிக்கப்படும்.

பணக்காரர்களுக்கு ஏன் நிவாரண நிதி? மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்