கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள குமரி வீராங்கனை டெல்லி பயணம்

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்காக குமரி வீராங்கனை போலந்து செல்கிறார். இதற்காக இரவோடு இரவாக டெல்லிக்கு புறப்பட்டார்.

Update: 2021-08-15 03:09 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் முஜிப்-சலாமர் தம்பதி மகள் சமீகா பர்வீன் (வயது 19). செவித்திறன் குறைபாடு உடைய இவர் தேசிய தடகள போட்டிகளில் பங்கு பெற்று 11 தங்கப்பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். போலந்து நாட்டில் செவிதிறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச தடகள சாம்பியன் போட்டி இந்த மாதம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் டெல்லியில் நடந்த தேர்வு போட்டியில் வீராங்கனை சமீகா பர்வீன் நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்றார். ஆனால் சர்வதேச போட்டிக்கு தனியாக ஒரு பெண்ணை அனுப்ப முடியாது என்று அவரை தேர்வு செய்யவில்லை.

ஐகோர்ட்டு உத்தரவு

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சமீகா பர்வீன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், சமீகா பர்வீன் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் சமீகா பர்வீன் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் வந்தார். போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) சமீகா பர்வீன் டெல்லியில் இருக்க வேண்டும் என அழைப்பு வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக காரில் சென்னைக்கு புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து கோர்ட்டு உத்தரவை சமர்ப்பிக்கிறார்.

போலந்து செல்கிறார்

பின்னர் ஒரு வாரம் டெல்லியில் பயிற்சியில் பங்கேற்று சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள போலந்து செல்கிறார். இவர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 5 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்தார். எனவே, போலந்தில் நடக்கும் போட்டியில் உலக சாதனை படைப்பார் என அவரது பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்