ஆன்லைன் ரம்மி தடைக்கு தமிழக அரசு 6 மாதத்தில் சட்டம் இயற்றும் என நம்புகிறோம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து

ஆன்லைன் ரம்மி தடைக்கு 6 மாதங்களுக்குள் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நம்புவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-17 12:31 GMT
மதுரை,

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் இணையதள சேவைகஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இந்த சூழலில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பான உத்தரவை இன்று வெளியிட்டது. அதில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், தமிழக அரசு விரைவாக செயல்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், தமிழக அரசு விதித்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பின்னர், தமிழக சட்டத்துறை அமைச்சர் உரிய வழிகாட்டுதலோடு விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஊடகங்களில் தெரிவித்திருந்தார். பல உயிர்கள் இது போன்ற தளங்களால் பறிபோகின்றன. ஆகவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்