தர்மபுரி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தர்மபுரி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-23 19:52 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், அப்போதைய தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுக்குழுவின் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். 

அந்தகூட்டத்தில் அ.தி.மு.க. அரசையும், அப்போது அமைச்சர் பொறுப்பு வகித்தவர்களின் மீது இருந்த ஊழல் புகார்களையும் பட்டியலிட்டு பேசினார். இதையடுத்து அ.தி.மு.க. அமைச்சர்களை அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவருடைய தரப்பில் தி.மு.க. மூத்த வக்கீல் கருணாநிதி கோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கை வாபஸ் பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்