ஆன்லைன் மூலமாக அமெரிக்க கல்வி கண்காட்சி 2 நாட்கள் நடக்கிறது

ஆன்லைன் மூலமாக அமெரிக்க கல்வி கண்காட்சி வருகிற 27 (நாளை மறுதினம்) மற்றும் செப்டம்பர் 3-ந் தேதிகளில் நடக்க இருக்கிறது.

Update: 2021-08-24 19:17 GMT
சென்னை,

“அமெரிக்காவில் கல்வி” என்ற பெயரில் ஆன்லைன் வாயிலாக அமெரிக்க கல்வி கண்காட்சி வருகிற 27-ந் தேதி (நாளை மறுதினம்) மற்றும் செப்டம்பர் 3-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை அளிக்கும் 100-கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பங்கேற்க இருக்கின்றன.

இதில் இந்திய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே அமெரிக்க பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பல்கலைக்கழக சேர்க்கை வழிமுறைகள், பல்கலைக்கழக வளாக வாழ்க்கை, மாணவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் கொரோனா தொற்று கால அமெரிக்க பல்கலைக்கழக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் என பல்வேறு தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காட்சியில் பங்கேற்க பதிவு கட்டணம் எதுவும் இல்லை.

இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்

அமெரிக்காவில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 27-ந் தேதி (நாளை மறுதினம்) மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் கண்காட்சி நடக்கிறது. இதில் பங்குபெற உள்ளவர்கள் https://bit.ly/EdUSAFair21EmbWeb என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல், பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு செப்டம்பர் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் https://bit.ly/UGEdUSAFair21EmbWeb என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.

இது குறித்து சென்னை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் கூறுகையில், ‘கடுமையான உழைப்பு, திறமை மற்றும் வகுப்பறைகளில் அவர்களின் கலாசார மற்றும் அறிவுப்பூர்வமான பங்களிப்பு காரணமாக இந்திய மாணவர்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் மதிக்கின்றன. இந்திய மாணவர்களும், பெற்றோரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கண்காட்சியில் பங்கேற்று பயன் அடைய அழைக்கிறோம்' என்றார்.

மேற்கண்ட தகவல் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்