தாசில்தார் மீது தாக்குதல்; தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டம்

தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாசில்தாரை தாக்கியதை கண்டித்து தாலுகா அலுவலக ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-03 20:18 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர நிலவரி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை எடத்தெரு பகுதியை சேர்ந்த தி.மு.க. நகர பொருளாளர் கோபி என்பவர் நிலவரி திட்ட அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது, பணியில் இருந்த தாசில்தார் பாத்திமா சகாயராஜியிடம் சர்வே எண் ஒன்றை கொடுத்து அது யார் பெயரில் உள்ளது என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு தாசில்தார் பதில் அளித்துள்ளார். மேலும் மற்றொரு சர்வே எண் தொடர்பாக கேட்டபோது அதற்கு உரிய ஆவணத்தை தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகி்றது. இதில் காயம் அடைந்ததாக கூறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ், கோபி ஆகியோர் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு

கோபி மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் நிலஅளவை ஆய்வாளர் குணசேகரன் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோபி மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊழியர்கள் போராட்டம்

இதற்கிடையில் தனி தாசில்தாரை அலுவலகத்துக்குள் வந்து தாக்கிய தி.மு.க. பிரமுகரை கண்டித்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பூட்டி விட்டு அங்கு நின்று கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்