கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: டிரைவர் கனகராஜின் மனைவி உள்பட 4 பேரிடம் ரகசிய விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், விபத்தில் மரணம் அடைந்த கனகராஜின் மனைவி உள்பட 4 பேரிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஆவணங்களை திரட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2021-09-04 22:59 GMT
கோடநாடு வழக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயானிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.இதையடுத்து விபத்தில் பலியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீசார், எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கனகராஜின் மனைவியிடம் விசாரணை
இந்தநிலையில் விபத்தில் இறந்த டிரைவர் கனகராஜின் மனைவி கலைவாணி, கனகராஜின் மைத்துனர் ஆகியோரிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.கனகராஜ் இறப்பதற்கு முன்பு எங்கெங்கு சென்றார்?, அவருக்கு மிரட்டல் இருந்ததா? என்பது உள்பட பல்வேறு தகவல்களை போலீசார் விசாரணை மூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.மேலும், கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகையின்போது பணியாற்றிய அரசு ஊழியர் ஒருவர் மற்றும் கோடநாடு எஸ்டேட் ஊழியர் ஆகியோரிடமும் நேற்று விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

ஆவணங்கள்
இந்த வழக்கில் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான ஆவணங்களை திரட்ட 2 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள், அதில் தொடர்புடையவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அந்த விவரங்கள் ஆவணங்களாக சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் புலனாய்வு விசாரணை மூலம் தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்