கரூரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்; போலீசார், இந்து முன்னணியினர் இடையே தள்ளுமுள்ளு

கரூரில் தடையை மீறி நள்ளிரவில் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதால் போலீசார், இந்து முன்னணியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2021-09-09 18:50 GMT
கரூர், 
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தக்கூடாது என தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரூர் ஈஸ்வரன் கோவில் முன்பு சிலர் விநாயகர் சிலையை வைத்து அதற்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்வதாக கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன், இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 
தள்ளுமுள்ளு
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு இருந்த சிலையை எடுத்துச்சென்று ஈஸ்வரன் கோவில் உள்பகுதியில் வைத்தனர்.
துதிக்கை சேதம்
இதேபோன்று வ.உ.சி. தெரு பகுதியிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு இருந்த விநாயகர் சிலையை போலீசார் தூக்கியபோது விநாயகர் சிலையின் துதிக்கை சேதம் அடைந்தது. இதனைதொடர்ந்து அந்த சிலையை எடுத்துச்சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பாதுகாப்பு
இந்த நிலையில் கரூர் சுக்காலியூர் அருகே உள்ள கருப்பம்பாளையத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே வைத்தனர்.பின்னர் அந்த சிலைக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தாந்தோணிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்