நெல்லை, திண்டுக்கல், கோபியில் தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினர் கைது

நெல்லை, கோபி, திண்டுக்கல், வேலூரில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயன்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-10 22:15 GMT
நெல்லை,

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில்கள் முன்பு மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது. இதனால் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெல்லை மாநகர பகுதிகளில் கோவில்கள் முன்பு மற்றும் வீதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இதை கண்டித்து இந்து முன்னணியினர் நேற்று போராட்டம் அறிவித்திருந்தனர்.

63 பேர் கைது

அதன்படி நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவில் முன்பு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து தடையை மீறி விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 13 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை அகற்றினர்.

கோபியில் 8 பேர் கைது

கோபி பஸ் நிலையம் அருகே விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 3 சக்கர சைக்கிளில் 2 விநாயகர் சிலைகளை வைத்து கொண்டு ஊர்வலமாக கோஷம் எழுப்பியபடி பஸ் நிலையம் நோக்கி வந்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தடையை மீறி வந்ததாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 2 விநாயகர் சிலைகளையும், 3 சக்கர சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊர்வலம்-தள்ளுமுள்ளு

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்படுவது வழக்கம். அதனால் கோவில் முன்பு நேற்று காலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட தலைவர், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட இந்து முன்னணியினர் சிலர் திடீரென 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல்-வேலூர்

திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்கப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சுமார் 3½ அடி உயரமுள்ள விநாயகர் சிலையை இந்து முன்னணியினர் கொண்டு வந்தனர். பின்னர் விநாயகர் சிலையை எடுத்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். கோவிலில் இருந்து சில அடிதூரம் சென்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். ஊர்வலம் நடத்தியதாக இந்து முன்னணியினர் 30 பேரை கைது செய்தனர்

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக சிவசேனா மாநில அமைப்பாளர் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரையில் இந்து அமைப்பினர் விநாயகர் சிலை களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று குளத்தில் கரைத்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த இந்து முன்னணி அமைப்பினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்

இந்து முன்னணி மாநில தலைவர்

திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் சந்திப்பு பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்று நினைத்து மக்களை சில அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள். தனித்தனியாக விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கரைக்க அனுமதித்தால் அதன்படி செய்ய தயாராக இருந்தோம். காவல்துறையுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நடத்தக்கூடாது என்று இந்த அரசு செயல்பட்டது. விநாயகர் சதுர்த்தி அன்று கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் பொதுமக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்த அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் அனுமதிக்கவில்லை.

அரசின் கட்டுப்பாடு காரணமாக மக்கள் எழுச்சியோடு விநாயகர் சிலைகளை வீடுகளில் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள். அந்த வகையில் விநாயகர் வழிபாடு எழுச்சியை ஏற்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்