‘தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க. ஆட்சிதான்’ முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களிடம் நல்லவர்கள், வல்லவர்கள் என்று பெயர் எடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் இனி தி.மு.க. ஆட்சிதான் என்ற அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் தொண்டர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Update: 2021-09-16 00:17 GMT
சென்னை,

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள், பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், தி.மு.க.வின் 73-வது ஆண்டு தொடக்க விழா ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். விழாவில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ‘பெரியார் விருதை’ மிசா பி.மதிவாணனுக்கும், ‘அண்ணா விருதை’ தேனி எல்.மூக்கையாவுக்கும், ‘கலைஞர் விருதை’ கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கும், ‘பாவேந்தர் விருதை’ வாசுகி ரமணனுக்கும், ‘பேராசிரியர் விருதை’ பா.மு.முபராக்கிற்கும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர், தி.மு.க.வில் ஒன்றிய, நகர, பேரூர், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு கலைஞர் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கினார்.

‘முரசொலி’ செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ என்ற புத்தகத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தொண்டர்களுக்கு நன்றி

பின்னர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி பேசும்போது, ‘இன்னும் 8 மாதத்தில் ஆட்சி மாறப்போகிறது' என்று நான் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. 6-வது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிட்டது. அந்த மகத்தான மாற்றத்துக்கு பிறகு நடக்கும் முதல் முப்பெரும் விழா இது என்பதால், தி.மு.க.வின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் (தொண்டர்கள்) இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதனை அறிவித்தபோது பேரவை அதிரக் கிடைத்த வரவேற்பு என்பது நூற்றாண்டு எழுச்சியை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

கடமை

“உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறோம்! எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாட்டு மக்களிடம் நாம் வாக்குகளைக் கேட்டோம். இந்த 4 மாதகாலத்தில் நாட்டு மக்களிடையே ‘நல்லவர்கள் நாம்’, ‘வல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் இவர்கள் என்று பெயர் எடுத்துள்ளோம். ‘தி.மு.க. ஆட்சி சொன்னதைச் செய்யும்’ என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த ஒருமாதமாக நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்து பேசிய அமைச்சர்கள், தங்கள் துறை சார்பில் ஏராளமான அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.

அந்த பணிகள் எவ்வாறு நடக்கிறது என்று மாதம் இருமுறை ஒவ்வொரு துறையையும் நான் ஆய்வு செய்து மக்களிடத்தில் சேர்க்கின்ற கடமைதான் என்னுடைய கடமை.

நிரந்தரமாக நம் ஆட்சி

இன்னும் நமக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. விரைவில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இவைகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் நாம் கையெழுத்துப் போடும் திட்டங்கள், குக்கிராமங்கள் வரை போக வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் வசம் இருக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என்று ஏங்கும்படியாக நம் பணி இருந்திட வேண்டும்.

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டும். அதற்கு தேவையான அடித்தளத்தை தி.மு.க. தொண்டர்கள் உருவாக்கியாக வேண்டும். “பெரியாரின் பிள்ளைகள் நாம், அண்ணாவின் தம்பிகள் நாம், கருணாநிதியின் உடன்பிறப்புகள் நாம்” என்பதை கட்சியிலும், ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ்நாட்டை உருவாக்க இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம், சபதமேற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

100 நாளில் புகழ்

துரைமுருகன் பேசுகையில், ‘இந்தியாவின் எட்டுத்திக்கிலும் மு.க.ஸ்டாலினின் புகழ் பாடப்படுகிறது. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வது வரலாறு. ராஜராஜ சோழன் மிகப்பெரிய மன்னன். தஞ்சை பெரிய கோவிலை கட்டினான். அவனுக்கு மகனாக பிறந்த ராஜேந்திர சோழன் எட்டுத்திக்கிலும் வெற்றி பெற்றான். தந்தையை விட வேகமாக வளர்கிற ஆற்றல் ஒரு சிலருக்கு உண்டு. அதுதான் கருணாநிதி முதல்-அமைச்சராகி பல்லாண்டுக்கு பிறகு பெற்ற புகழை எல்லாம், மு.க.ஸ்டாலின் இந்த 100 நாளில் பெற்றிருக்கிறார்' என்று பேசினார்.

விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், கனிமொழி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்