‘டாக்டருக்குதான் படிக்க வேண்டும்’ என குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது பெற்றோருக்கு அமைச்சர் வேண்டுகோள்

‘டாக்டருக்குதான் படிக்க வேண்டும்’ என பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-09-17 23:09 GMT
சென்னை,

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவின் ஒரு சில அடையாளங்களில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகமும் ஒன்று. இதை தரம் உயர்த்தி, மனநல ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தற்கொலை உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சாணி பவுடருக்கு தடை

தற்கொலை எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாக, சாணி பவுடரை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பால்டாயில், எலி மருந்து ஆகியவற்றை கடைகளில் வெளிப்படையாக விற்க கூடாது. மேலும் அவற்றை தனிநபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. 2 நபருக்கு மேல் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என வணிகர்களுக்கு அறிவுறுத்தும் அரசாணைகள் துறையின் அலுவலர்கள் மூலம் விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

அழுத்தம் கொடுக்க கூடாது

அதையடுத்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள நீட் தேர்வு எழுதியவர்களுக்கான மனநல ஆலோசனை மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு எழுதியவர்களுக்கான மனநல ஆலோசனை மையத்தில் இருந்து தற்போது வரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 60 மனநல ஆலோசகர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களில் ஒரு சிலர், ‘எங்களுடைய பெற்றோர்தான் எங்களை டாக்டராக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்காகத்தான் நாங்கள் வருத்தப்படுகிறோம்’ என்று கூறுகின்றனர்.

இதையடுத்து மனநல ஆலோசகர்கள் மூலம் பெற்றோரிடம் ‘உங்கள் குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது, அவர்களுக்கு மனதைரியத்தை ஏற்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தி வருகிறோம். மேலும், தொலைபேசியில் மனநல ஆலோசகர்களுடன் பேசிய சிலர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மாணவர்களுக்கான இந்த மனநல ஆலோசனை இன்னும் 15 நாட்களுக்குள் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்