முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ஆய்வு; கலெக்டரிடம் கனிமவள துறை அறிக்கை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் வீட்டின் பின்புறம் இருந்த 551 யூனிட் மணல் பற்றி ஆய்வு செய்த கனிமவள துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

Update: 2021-09-19 05:18 GMT
சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் புரிந்த அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தின் போதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை போட்டு நடவடிக்கை எடுத்தனர்.

அதன்பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, கோவை, சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அ.தி.மு.க. முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 16ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். ரூ.28.78 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக 6 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், கடந்த 16ந்தேதி அதிகாலை முதல் கே.சி.வீரமணி தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் இந்த சோதனை வேட்டையை நடத்தினார்கள்.

சென்னையில் சாந்தோம், லீத் காஸ்டல் வடக்கு சாலையில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டிலும், அந்த வீட்டின்முன்பு நின்ற 2 கார்களிலும் சோதனை போடப்பட்டது.

சென்னை சூளைமேடு, கில் நகர் சிவானந்தா சாலையில் உள்ள ஒரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை போடச்சென்றனர். அந்த வீடு பூட்டி கிடந்தது. இதனால் அந்த வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து விட்டு சென்றனர்.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை கொளத்தூர் செண்பகா நகரில் உள்ள மற்றொரு வீட்டிலும் சோதனையிட்டனர். ஆனால் அந்த வீடு விற்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அது தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள வீரமணியின் வீட்டில் காலை 6.30 மணியளவில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்தாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது வீரமணி வீட்டில் இல்லாததால் நாட்டறம்பள்ளி சாலையில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த வீரமணியை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஓட்டல் ஹில்ஸ், ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஓட்டல் ஹில்ஸ் ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனையை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிப்காட் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான பிரமாண்ட நட்சத்திர ஓட்டல் மற்றும் திருமண மண்டபம் உள்ளது. இங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

பெங்களூருவில் 2 இடங்களிலும், சென்னையில் 6 இடங்களிலும் என மொத்தம் 35 இடங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் வீரமணியின் வீட்டின் பின்புறம் 551 யூனிட் மணல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது.  இவற்றின் மதிப்பு ரூ.33 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதுபற்றி ஆய்வு செய்த கனிமவள துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்