2-ம் கட்ட மெகா சிறப்பு முகாம்: தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று 2-ம் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Update: 2021-09-19 19:10 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மெகா சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் மெகா சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அன்றைய தினம் ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்தது.

2-ம் கட்ட முகாம்

இந்தநிலையில் 2-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் மருத்துவ வாகனங்கள், சமூக நலக்கூடங்கள், பள்ளி-கல்லூரிகள், பொது இடங்கள் உள்பட 40 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளைஞர்கள், வியாபாரிகள், இல்லத்தரசிகள் என அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்றனர்.

சென்னையில் 1,600 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அடையாரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பசுமை வழி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம் உள்பட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

16.43 லட்சம் பேர்

சென்டிரல் ரெயில் நிலையம், ராயபுரம் மண்டலத்துக் குட்பட்ட பி.ஆர்.என். கார்டன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம் களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மாநகராட்சி உயரதிகாரிகள் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் கண்காணிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். சென்னையில் தியாகராயநகர் உள்பட வணிக தளங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் வணிகர்களும், பொதுமக்களும் மும்முரமாக பங்கேற்றனர்.

எழும்பூர் புறநகர் போலீஸ் நிலையம் உள்பட்ட இடங்களும் தடுப்பூசி முகாம் மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. தமிழகத்தில் 2-வது கட்டமாக நடைபெற்ற மெகா சிறப்பு முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமில் மதியம் 12 மணி நிலவரப்படி 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6 மணி நிலவரப்படி 15 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 97 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 58 ஆயிரத்து 782 பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 19 நாட்களில் மட்டும் 1 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 2 லட்சம் பேர்

இதேப்போல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் 18 ஆயிரத்து 480 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்