தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-22 01:28 GMT
சென்னை, 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

அதன்படி, இன்று திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 25-ந் தேதியும் (சனிக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்