நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-09-22 19:57 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சரித்திரம் கிடையாது

தேர்தல் அறிக்கையை எப்போதுமே நிறைவேற்றிய சரித்திரம் தி.மு.க.விற்கு கிடையாது. தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் செய்துள்ளார்களா, கிடையாது.

நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தைதான் அவர்களும் கொண்டு வந்துள்ளனர். இனி ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறுவார்கள்.

அதுபோல்தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி உள்ளனர். அதற்கும் பல விதிமுறைகள் உள்ளதாக தெரிகிறது.

சட்டமன்ற தேர்தல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 2024-ம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுவதால், அந்த நேரத்தில் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் நாடாளுமன்றத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரலாம்.

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடுவதில்தான் தி.மு.க. அரசு கவனம் செலுத்துகிறது. அ.தி.மு.க.வில் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்