கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2021-09-23 20:56 GMT
சேலம்,

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் அந்த சம்பவம் நடந்த சில நாட்களில் சேலம் மாவட்டம் சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்தநிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தற்போது மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தம்பியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கனகராஜின் மனைவி கலைவாணியும் தனது கணவர் விபத்தில் பலியாகவில்லை என்றும், அவரை கொலை செய்துவிட்டதாகவும் கூறினார்.

மீண்டும் விசாரணை

ஏற்கனவே கனகராஜ் விபத்தில் பலியான வழக்கு விசாரணை ஆத்தூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து முடிந்தது. இதற்கிடையே, கனகராஜின் குடும்பத்தினர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் கோடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் கனகராஜ் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்காக இன்னும் சில நாட்களில் தனிப்படை போலீசார் சேலம் வந்து கனகராஜின் விபத்து வழக்கை ஆரம்ப நிலையில் இருந்து மீண்டும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்