குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்கு

காப்பக குழந்தைகளை வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக புகார் வந்ததன் அடிப்படையில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-10-03 20:19 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவரது மனைவி கலைமகள் (48). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கணவருடன் சேர்ந்து மறிங்கிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்தி வந்துள்ளார்.

இந்த காப்பகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் நிதி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை கொண்டு பராமரிக்காமல், குழந்தைகளை வீட்டுவேலைக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

காப்பகத்துக்கு ‘சீல்’

இதுகுறித்து புகார் வந்ததால் காப்பகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த காப்பகத்தில் இருந்த 19 குழந்தைகள் வேறு காப்பகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அந்த காப்பகத்தில் மீண்டும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கிருந்த 7 குழந்தைகளை வேறு காப்பகத்திற்கு மாற்றினர். மேலும் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்