பள்ளிக்கல்வித்துறையில் வேலை: போலி அரசாணை வழங்கி மோசடி செய்யும் கும்பல் மீது நடவடிக்கை

சென்னை பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக, போலி அரசாணைகளை வழங்கி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-04 22:11 GMT
சென்னை,

சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தேர்வுதுறையில் இளநிலை பணியாளர் வேலைக்கு ஆள் எடுப்பதாகவும், ரூ.2 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருவதாகவும் கூறி ஒரு மோசடி கும்பல் அப்பாவி பட்டதாரிகளிடம், முன் பணமாக ரூ.50 ஆயிரம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்த கும்பல் குறிப்பிட்ட வேலைக்காக போலி அரசாணை நகலையும் கொடுத்துள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அந்த மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

விசாரணை

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்