திரையரங்குகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா? அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

திரையரங்குகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா? அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-10-04 22:55 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் பெரம்பூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பெரம்பூரில் உள்ள மாலில் அமைந்திருக்கும் திரையரங்கில், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் பல லட்ச ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறையாக விசாரணை செய்து உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும், அதில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021-ம் ஜூலை மாதம் வரை ரூ.12 லட்சத்து60 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்