ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.

Update: 2021-10-06 22:23 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தும், காலத்திற்கு ஒவ்வாத கட்டுப்பாடு காரணமாக, அப்பணியில் சேர முடியாத நிலைக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். 42 வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டால், ஆசிரியர் பணி கனவில் இருந்தவர்களின் வாழ்வே தொலைந்து விடக்கூடும்.

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை ‘ஆன்லைன்’ போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டித்தேர்வுக்கு ஆன்லைனில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இம்மாதம் 17-ந்தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய இயலும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சியானது என்றாலும் கூட, 42 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். எனவே, லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்