தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-10-07 19:15 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. உரத்தட்டுப்பாடு மற்றும் உர விலை உயர்வால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்ளை அதிகளவில் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் மத்திய அரசுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதற்கு இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலில் வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கு தேவையான உரங்களை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உர விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.

வெளிச்சந்தையில் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உரங்களுக்கான தட்டுப்பாடு தீரும் வரை யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய இரு உரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்