கடலூரில் மனநோய்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி

உலக மனநல தினத்தையொட்டி கடலூரில் நடந்த மனநோய்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-11 19:34 GMT
கடலூர், 

ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி சர்வதேச அளவில் “உலக மனநல தினமாக“ கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரைப்படி அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து சமுதாயத்தில் மனநலம் மற்றும் மனநோய்க்கு உண்டான சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக மனநல விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. அதன்படி மனநோய்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் அருகில் நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்து கூறுகையில், மனநல ஆராய்ச்சிகள் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் தீவிர மன நோயாலும், 10-15 சதவீதம் பேர் மற்ற நோய்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என கணிக்கிறது.

துண்டு பிரசுரம்

சமுதாய விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றி மனநோய் மீதுள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுவதற்காக இப்பேரணி நடத்தப்படுகிறது என்றார். தொடர்ந்து மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து நடந்த விழிப்புணர்வு பேரணி பாரதி சாலை வழியாக சென்று அரசு ஆஸ்பத்திரியில் முடிந்தது.

இதில் அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சாய்லீலா, மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி, தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மாற்றுத் திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், ஓயாசிஸ் எப்சிபா தவராஜ் மற்றும் மனநல டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்