எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் கூடாது அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிகாரிகள் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-11 22:49 GMT
சென்னை,

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் 24 ஆண் குழந்தைகளும், 25 பெண் குழந்தைகளும் எந்தவித அனுமதியும் பெறாமல் பராமரிக்கப்படுவதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில், காப்பகத்தை மூட அம்பத்தூர் தாசில்தார் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதை ரத்து செய்யக்கோரி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காப்பகத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டது.

குழந்தைகள் இல்லை

அதன்படி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, காப்பகத்தில் தற்போது எந்த குழந்தையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அதிகாரியின் அறிக்கையை படித்து பார்த்தார். பின்னர் அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று உத்தரவிட்டார்.

மேலும் உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் பாதுகாப்பு என்பது முக்கியமானது. எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிகாரிகள் சமரசம் செய்துகொள்ளக்கூடாது.

அதிகாரிகள் ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள், நிர்வகிக்கும் நபர்கள் குறித்து அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுகள் நடத்த வேண்டும்.

இதுபோல் உரிய கால இடைவெளியில் அதிகாரிகளால் முறையாக ஆய்வுகள் நடத்தப்பட்டு இருந்தால், அனுமதியின்றி குழந்தைகளை காப்பகம் பராமரித்து இருக்காது. இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்