என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் 25-ந் தேதி தொடங்கும் அமைச்சர் தகவல்

என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் 25-ந் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2021-10-11 23:23 GMT
சென்னை,

என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் 186 மதிப்பெண்கள் வரை பெற்ற 10 ஆயிரத்து 148 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு 7,510 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர். 2-வது கட்டத்தில் 174 மதிப்பெண்கள் வரை பெற்ற 20 ஆயிரத்து 438 பேர் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் சுற்றில் 7,510 பேரும், 2-ம் சுற்றில் 13 ஆயிரத்து 415 பேரும் என சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு அது சுமார் 31 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. 3 மற்றும் 4-வது கட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளன. அதில் நிறைய மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள். எனவே இந்த ஆண்டை பொறுத்த வரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியிடம் என்பதே இருக்காது. எல்லா பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 25-ந் தேதி தொடங்கும்.

பொருளாதார இடஒதுக்கீடு கிடையாது

சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி பிரிவில் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அப்போதைய துணைவேந்தர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சியாக இருந்தபோதே தி.மு.க. அதை எதிர்த்தது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு பயோ டெக்னாலஜி பிரிவை பொறுத்தவரை மத்திய அரசின் உதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 69 சதவீத மாநில இடஒதுக்கீட்டின்படிதான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரிக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுத இருக்கிறார். அந்த உதவித்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பயோ டெக்னாலஜி பிரிவில்...

பாரதியார் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம் என எல்லா பல்கலைக்கழகங்களிலும் பயோ டெக்னாலஜி பிரிவு இருக்கிறது.

எல்லா இடங்களிலும் பொருளாதார இடஒதுக்கீடு இந்த ஆண்டு பின்பற்றப்படவில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றிதான் மாணவர் சேர்க்கை நடக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

5,970 அரசு பள்ளி மாணவர்கள்

அதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் இதுவரை எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்?

பதில்:- 5,970 பேர் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த 2 கட்ட கலந்தாய்வுகளிலும் மாணவர்கள் சேர இருக்கிறார்கள். இதுவரை சேர்ந்திருப்பவர்களில் பலர் ‘நீட்’ போன்ற தேர்வுகள் எழுத செல்ல வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்படும் காலியிடங்களுக்கு மேலும் சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கடந்த முறை கூட 500 காலியிடங்கள் ஏற்பட்டன. இந்த முறை காலியிடங்களே இருக்காது எனும் நிலையில் உயர்கல்வித்துறை முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

கேள்வி:- 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் தற்போது சுமார் 6 ஆயிரம் மாணவர்களே சேர்ந்துள்ளார்கள். மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதற்கு காரணம் என்ன?.

பதில்:- அடுத்த 2 கட்ட கலந்தாய்வுகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதெல்லாம் முடிந்தபிறகு, இடஒதுக்கீடு முடிந்தபிறகு, காலியிடங்களை நிரப்புவது குறித்த நடவடிக்கை கையாளப்படும்.

கட்டண சலுகை

கேள்வி:- என்ஜினீயரிங் பாடத்திட்டம் எந்த வகையில் நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது?

பதில்:- பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தொழிற்சார் கல்வி கற்கும் விதமாக அது அமையும் என்று அறிவித்திருக்கிறோம். எனவே அது வரும்போது பாருங்கள்.

கேள்வி:- பொதுப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் கட்டண சலுகை கிடைக்குமா?

பதில்:- எல்லாருக்கும் உண்டு. அரசு பள்ளிகளில் படித்து இங்கு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டண சலுகை, விடுதி கட்டணத்தில் சலுகை நிச்சயம் உண்டு.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்