உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முறையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் - ஐகோர்ட்டு

வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய கோரிய வழக்குகளுக்கு பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-10-12 07:36 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை ஏற்கெனவே தொடங்கி விட்டது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்குகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்” என்று அவர்கள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்