ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று (சனிக்கிழமை) மரியாதை செலுத்துகிறார்.

Update: 2021-10-15 23:09 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்தார். ஆனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வந்தார்.

அப்போது அவர், கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்கியதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து எனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்று தெரிவித்து வந்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. தனது பொன்விழா ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தநிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார்.

அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிடுவாரா? என்பது அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். இல்லம்

இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு தொடக்க நாளான 17-ந்தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் சசிகலா செல்கிறார்.

சசிகலா, அ.தி.மு.க. கொடி கட்டிய காரில்தான் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்