கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது

கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது - சைபர் கிரைம் போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்.

Update: 2021-10-17 23:02 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கல்யாணராமன்(வயது 57). பா.ஜ.க. பிரமுகரான இவர், தனது சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக கருத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் இவர் பல்வேறு மதங்களுக்கு எதிராக தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் இதுபோல் 18 பதிவுகளை செய்து உள்ளதாகவும், தர்மபுரி தொகுதி எம்.பி. செந்தில்குமாரின் உதவியாளர் கோபிநாத் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார். அதனையும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மறுபதிவு செய்திருந்த கல்யாணராமன், அது குறித்தும் சர்ச்சை கருத்தை பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து கல்யாணராமனை கைது செய்ய 30-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார், நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த கல்யாணராமனின் ஆதரவாளர்கள், பா.ஜ.க. பிரமுகர்கள், தொண்டர்கள், அவரது வக்கீல்கள் ஆகியோர் கல்யாணராமனை கைது செய்ய விடாமல் போலீசாரை தடுத்தனர். அதையும் மீறி போலீசார் கல்யாணராமனை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள், சைபர் கிரைம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு, முள்ளு, கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர், ஏற்கனவே இதுபோல் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்