‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ‘சொமேட்டோ’ ஊழியர் கூறியதால் சர்ச்சை

சமூக வலைத்தளங்களில் வைரலானது: ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ஊழியர் கூறியதால் சர்ச்சை மன்னிப்பு கேட்ட ‘சொமேட்டோ’ நிறுவனம்.

Update: 2021-10-19 23:56 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் எஸ்.எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் விகாஸ். தனியார் நிறுவன ஊழியரான இவர் ‘சொமேட்டோ’ ஆன்லைன் உணவு வினியோக நிறுவனம் மூலமாக ஒரு உணவகத்தில் ‘சிக்கன் ரைஸ் காம்போ பேக்’ ஆர்டர் செய்து உள்ளார்.

ஆனால் அவருக்கு ‘சிக்கன் ரைஸ்’ மட்டுமே வினியோகம் செய்யப்பட்டுள்ளது. உணவகத்தை தொடர்புகொண்டபோது, ‘சொமேட்டோ’ நிறுவனத்திடம் பணத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு உணவகத்தினர் கூறியதால் விகாஸ் ‘சொமேட்டோ’ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பணத்தை வாபஸ் தருமாறு கேட்டார். அங்கிருந்த ஊழியர் இந்தியில் பதில் அளித்துள்ளார். ஆனால் விகாசுக்கு இந்தி தெரியாது.

மேலும், ‘இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும். இதனால் பணத்தை வாபஸ் தர இயலவில்லை’ என்று கூறியதாக தெரிகிறது. இந்த தகவலை விகாஸ் ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்தார். அது வைரலாகி பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து ‘சொமேட்டோ’ நிறுவனம் ‘வணக்கம் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளது. சர்ச்சைக்கு காரணமான ஊழியரை பணிநீக்கமும் செய்தது. மேலும் ஒரு நிறுவனமாக முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். கோவையில் ஒரு உள்ளூர் தமிழ் வாடிக்கையாளர் சேவை மையத்தை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஊழியரை பணி நீக்கம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு விகாஸ் கோரிக்கை வைத்ததையடுத்து, 2 மணி நேரத்தில் அந்த ஊழியரை மீண்டும் பணி அமர்த்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் ‘நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதை கட்டாயமாக்க வேண்டும். தமிழர்களுக்கு யாரும், யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்