“57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இதுவரை 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-20 11:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் இலக்கான 20 லட்சத்தை கடந்து 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளில் 2-வது மற்றும் 3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த தடுப்பூசி முகாம்களில் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கடந்த 3 மற்றும் 10 ஆம் தேதிகளில் 4-வது மற்றும் 5-வது மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் 6-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 13 ஆம் தேதி(சனிக்கிழமை) 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி பகுதியில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு தடுப்பூசி முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இதுவரை 340 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளதாகவும், டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்