முடிச்சூர் ஊராட்சி தலைவராக 23 வயது பெண் என்ஜினீயர் பதவி ஏற்றார்

முடிச்சூர் ஊராட்சி தலைவராக 23 வயதான பெண் என்ஜினீயர் பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-10-20 20:52 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த பரங்கிமலை ஒன்றியத்தில் 150 வார்டு உறுப்பினர்கள், 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 15 ஊராட்சி தலைவர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேற்று புறநகர் பகுதிகளில் உள்ள அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்றுக்கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.

அதன்படி முடிச்சூர் ஊராட்சி் தலைவராக 23 வயதான கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரியான சிந்துலேகா பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் ஏராளமான பொதுமக்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக நடந்து வந்து பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் வார்டு உறுப்பினர்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சாரட் வண்டியில்

இதேபோல் மதுரபாக்கம் ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் பதவி ஏற்றுக்கொண்டார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏராளமானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

அகரம் தென் ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற ஜெகதீஸ்வரன், இதற்காக சாரட் வண்டியில் வந்தார்.

திருவஞ்சேரி ஊராட்சி தலைவராக ஜனனி சுரேஷ்பாபு, பொழிச்சலூர் ஊராட்சி தலைவராக வனஜா, கவுல்பஜார் ஊராட்சி தலைவராக அனிதா, திரிசூலம் ஊராட்சி தலைவராக உஷா மாரிமுத்து ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்