அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்; மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்

அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-23 18:03 GMT
அம்மா உணவகம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அம்மா உணவகங்கள் ஏழை-எளிய மக்களின் பசியாற்று மையங்களாக திகழ்கின்றன. மலிவு விலையில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவுக்கு பின்னர் பன்மடங்கு பெருகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்றுவருகின்றன. தி.மு.க அரசும் ‘அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை' என அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவுமுறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. இது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோர் போன்றோருக்கு பயனுள்ளதாக இருந்தது. இப்போது திடீர் மாற்றமாக சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. மேலும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களை திடீரென பணி நீக்கமும், பணியிட மாற்றமும் செய்வதும் நிகழ்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு வாயிலாக இதை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள்.

சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்

சென்னை மாநகராட்சி தன் வருவாயை பெருக்கிக்கொள்ள பல வழிகள் இருக்கும்போது, சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல. இந்த திட்டத்தின்கீழ் பலனடையும் பணியாளர்கள், பயனாளிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். உணவு, மனிதர்களின் அடிப்படை உயிர் ஆதார விசைகளில் ஒன்றாக இருக்கும்போது, அதைக் குறைந்த விலையில் தரும் திட்டத்துக்கு செலவு செய்ய அரசு அமைப்புகள் தயங்கவே கூடாது.

அம்மா உணவக திட்டம், பெயர் மாற்றப்படாமலேயே சிறப்பாக தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், வரும் செய்திகளோ அந்த உறுதிமொழிக்கு எதிரானதாக உள்ளன. ஏழை-எளியவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை, முந்தைய ஆட்சியாளர்களைவிட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்கமுடியும். அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்