லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிய ரூ.1.58 கோடி நகைகளை தரக்கோரிய மனு தள்ளுபடி - கோர்ட்டு உத்தரவு

லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.58 கோடி தங்கம், வெள்ளி, வைர நகைகளை திரும்ப தரக்கோரி சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளரின் மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2021-11-05 21:20 GMT
சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் துறை அலுவலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்தவர் பாண்டியன்.

தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்குவதாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாண்டியனின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 88 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது.

சொத்துக்குவிப்பு

அதைத்தொடர்ந்து சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில், கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.58 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.15 கோடி சொத்து சேர்த்ததாக பாண்டியன், அவரது மனைவி லதா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிய நகை, ஆபரணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திரும்ப வழங்கக்கோரி பாண்டியனின் மனைவி லதா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சீதனமாக கொடுத்தவை

அந்த மனுவில், ‘எங்களது குடும்பம் படித்த கவுரமான குடும்பம். லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிய நகை, ஆபரணங்கள் எனது பெற்றோர் சீதனமாக கொடுத்தவை. எனது கணவரின் வருமானத்தில் இருந்தும் நகைகள் வாங்கப்பட்டன.

எங்கள் மகளின் பூப்புனித நீராட்டு விழா, மகன் திருமணம் ஆகியவற்றின் மூலம் சில நகைகள் அன்பளிப்பாக கிடைத்தன. சட்டப்பூர்வமான வழிகள் மூலம் மட்டுமே இந்த நகைகள் பெறப்பட்டன. மகளுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துவருகிறோம்.

அதற்கு நகைகள் தேவைப்படுகின்றன. எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிய நகைகளை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மனு தள்ளுபடி

மனுவை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், ‘தங்களது வருமானத்தின் மூலமே நகைகள் வாங்கப்பட்டன என்று மனுதாரர் தெரிவித்துள்ளபோதிலும் அதற்கான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்