தஞ்சை: கடப்பாரையை கொண்டு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி...!

தஞ்சாவூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

Update: 2021-11-06 04:05 GMT
தஞ்சை,

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் என்ற கிராமத்தில் பேங்க் ஆப் பரோடோ வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு (தீபாவளிக்கு முன்பு) பல லட்ச ரூபாய் பணம் நிரப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஏடிஎம் மையத்திற்குள் கடப்பாரை உள்பட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் நுழைந்துள்ளனர். கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு ஏடிஎம் மையத்தில் கதவை தூக்கி உள்ளே நுழைந்துள்ளனர். 

ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கு இருந்த ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையை கொண்டு உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால், ஏடிஎம் இயந்திரத்தின் மேற்பகுதி உடைந்ததையடுத்து அதில் பொறுத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி இயந்திரம் உடைக்கப்படுவது குறித்து வங்கி தலைமையகமான ஐதராபாத்திற்கு சிக்னல் கொடுத்துள்ளது. 

இந்த சிக்னல் குறித்து கண்டறியப்பட்ட உடன் அந்த வங்கி ஏடிஎம்-இல் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஐதராபாத்தில் உள்ள தலைமையகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் உடைத்து கொள்ளை முயற்சி நடப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து திருவிடைமருதூரில் உள்ள வங்கிக்கிளை அதிகாரிகளுக்கு தலைமையகத்தில் இருந்து உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட வங்கி அதிகாரிகள், கொள்ளை முயற்சி குறித்து போலீசாருக்கும், ஏடிஎம் இயந்திரம் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த மக்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.



இந்த தகவலையடுத்து, போலீசாரும், வேப்பத்தூர் கிராம மக்களும் ஏடிஎம் இருந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால், கிராமமக்கள் வருவதை கண்ட கொள்ளையர்கள் கொள்ளைமுயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 

கிராம மக்கள் வந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரத்தின் முன்பகுதி முழுவதும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் பாதுகாப்பாக உள்ளது. பணம் இருந்த பகுதியை உடைப்பதற்குள் பொதுமக்கள் திரண்டுவந்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த கொள்ளை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.



இந்த கொள்ளை முயற்சியில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்