கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்;
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி
பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்க உள்ளூர் போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் பழனியூர் எம்.ஜி.ஆர். நகரில் வைத்து ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்பெருமாள் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் போலீசார் வருவதை அறிந்ததும் கடத்தல்காரர்கள் லாரியை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் மேற்பார்வையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில லாரியில் 84 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 4 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்து நல்லூரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து அரிசியை சேகரித்து கடத்த முயன்ற ஆனைமலையை சேர்ந்த பால்பாண்டி, ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.